Srividya Janakiraman
GRADE 7B

வணக்கம். என் பெயர் ஸ்ரீவித்யா.

நான் பிறந்து வளர்ந்தது நம் சிங்காரச் சென்னையில். பள்ளிப் படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், கணிப்பொறியில் முதுகலைப் பட்டமும் பெற்று, எல்லோரையும் போல அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவோடு 27 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க மண்ணில் கால் பதித்தேன்.

என் அம்மா ஒரு தமிழ் ஆசிரியர். அதனால் சிறுவயதிலிருந்தே ஆசிரியப் பணியின் மேல் எனக்கு தீராத ஈர்ப்பும் காதலும் உண்டு. குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வழியிலும், புரியும் நடையிலும் பாடம் சொல்லிக் கொடுப்பதை அம்மாவிடம் பார்த்து கற்றுக்கொண்டேன். நான் பத்தாம் வகுப்பில் படித்தபோதே, என் அம்மாவின் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்தது. கற்றதை பிறருடன் பகிர்ந்து, அவர்களின் வளர்ச்சியில் ஒரு சிறு பங்காக இருப்பதே ஆசிரியப் பணியின் பெருமை என்று நான் நம்புகிறேன்.

அந்தப் பயணம் இன்றுவரை மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து வருகிறது. Marietta தமிழ் பள்ளியின் மூலம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்து வருகிறேன். அதோடு, வாரத்தில் ஒரு நாள் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆங்கிலமும் கற்பித்து வருகிறேன். குழந்தைகளின் ஆர்வம், கற்றுக்கொள்ளும் வேகம் மற்றும் அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

ஆசிரியப் பணிக்கு அடுத்தபடியாக கலைகளின் மீதும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் தற்போது பரதநாட்டியம் கற்று வருகிறேன். மேலும் கர்நாடக இசைப் பயிற்சியையும் தொடர்ந்து கற்று வருகிறேன்.

“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” என்ற உணர்வோடு, வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டும், கற்பித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

Apply for Admission or some other Call to Action